Saturday, September 4, 2010

சிறப்பாக புரிந்துகொள்வது எப்படி?

           சரியாக புரிந்துகொள்ளுதல் என்பது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெறவதற்கு, அவசியமான திறன்களில் ஒன்று. ஆனால் இதன் முக்கியத்துவம் தெரியாததாலே பலரும் தோல்வியை சந்திக்கின்றனர்.
           வகுப்பறை, கருத்தரங்கு, தொழில் கூட்டம், நண்பர்களுடனான சாதாரண கலந்துரையாடல் என திட்டமிட்ட மற்றும் திட்டமிடப்படாத தகவல் பரிமாற்றத்தின் போது, சரியாக புரிந்துகொள்ளும் திறன் தவிர்க்க முடியாத ஒரு திறனாகிறது. நமது கல்வி முறையிலும் கவனித்தலுக்கே முக்கிய பங்கு அளிக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான மாணவர்கள் சரியாக புரிந்துகொள்வதில் பின்னடைவையே சந்திக்கின்றனர். சிறப்பான தகவல் பரிமாற்ற திறன்களில் சரியாக புரிந்துகொள்ளும் திறனும் ஒன்று. மாணவர்களிடம் இத்திறனை மேம்படுத்தாமல், பெரும்பாலான கல்வி நிறுவனங்களால் ஒதுக்கப்பட்டும் வருவது கவலைக்குரியது.
எந்த ஒரு கலந்துரையாடல், தகவல் பரிமாற்றத்தின் போதும் சரியாக கவனித்தலும், மூச்சு விடுவதைப் போல், தன்னிச்சையாக நிகழும் அளவிலான திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிறப்பான பேசும் ஆற்றலை பெற்றிருப்பவர்களும், கவனித்தல் திறன் குறைவாக இருப்பின், தோல்வியையே சந்திக்க நேரிடும். தவறான புரிதலின் காரணமாக, தொடர்பில்லாதவற்றை பேசும் போது, அந்த உரையாடல் எப்படி வெற்றிகரமானதாக இருக்க முடியும்?
           மிகச் சிறந்த தகவல் பரிமாற்றத்திற்கு, சிறப்பான கவனித்தில் திறன் மிக முக்கியம், என்பது அனுபவமிக்க பேச்சாளர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்து. சிறந்த தகவல் பரிமாற்றத்தில் 80 சதவீத பங்கு கவனிக்கும் திறனை சார்கிறது; மீதமுள்ள 20 சதவீத பங்கு தான் பேச்சு திறனுக்கு... எனவே, ஒரு சாதனை தொடர்பியலாளராக, முதலில் துல்லியமான புரிந்துகொள்ளும் திறன் உடையவராக இருக்க வேண்டும்.
பள்ளி பருவத்தில் இருந்தே கவனிக்கும் திறனை வளர்த்திக்கொள்வதில், அதிக கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டு பலர் காலம் கடந்தபிறகு வருந்துகின்றனர். துல்லியமாக புரிந்துகொள்ளுதல் என்பது யாருக்கும் எளிதாக அமைவதில்லை. அதிக ஆர்வமும், தொடர் பயிற்சியும் இதற்கு தேவை. எப்பொதும் சாந்தமாகவே இருக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தால், இத்திறனை வளர்த்துக்கொள்ளவது சற்று கடினமாகவே அமையும். எனினும், இத்திறனுக்கான அவசியத்தை உணர்ந்து, அதனை வளர்த்துக்கொண்டு சாதனை படைத்தவர்களும் பலர். இது உங்களாலும் முடியும்...
சரியாக புரிந்து கொள்ள முடியாததற்கான பொதுவான காரணங்கள்:
* ஒருவர் பேசி முடிக்கும் வரை, காத்திருந்து கேட்கும் பொறுமை குறைவாக இருத்தல்.
* ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அவற்றை கவனிக்காமல் சுய கனவுகள், திட்டங்கள் போன்றவற்றில் மனதை செலுத்துவது.
* அடிக்கடி மனதில் தோன்றும் தொடர்பில்லாத நினைவுகளை கட்டுப்படுத்தும் திறன் இல்லாதது.
* மனதில் தோன்றும் சிந்தனைகளை வரிசைப்படுத்தாமல், குழம்புவது.
* சிறப்பான கவனித்தல் திறனுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக பல நேரங்களில் நவீன தொழில்நுட்பம் விளங்குகிறது. உதாரணமாக, மொபைல், எஸ்.எம்.எஸ்., இ-மெயில், டிவி.
* கோபம், பயம், கவலை, மன இறுக்கம் போன்ற தனிப்பட்ட ஒருவரின் மனநிலை.
* ஒருவர் பேசும்போது, அவர் இதைத்தான் கூற வருகிறார் என முன்கூட்டியே யூகித்துக் கொள்வது.
* அதிகம் பழக்கம் இல்லாத மொழியை பயன்படுத்தப்படும்போது.
* இரைச்சல் போன்ற சுற்றுப்புற காரணங்கள்.

இதுபோன்ற காரணங்களை தவிர்த்து, சரியாக புரிந்துகொள்வது எப்படி?
* ஆசிரியர் அல்லது பேசுபவரின் கண்களை பார்த்து, உன்னிப்பாக கவனிப்பது. (‘ஐ கான்டேக்ட்’ - இதற்கு சில நேரங்களில் வாய்ப்பு இல்லாமல் போகலாம்)
* திட்டமிட்ட நோக்கத்தின் அடிப்படையிலான கவனித்தல்.
* எந்த ஒரு விரிவுரை அல்லது பேச்சுக்களை கேட்கும்போதும், திறந்த மனதுடன் கவனியுங்கள்.
* பேசுபவரின் வார்த்தைகளை படமாக மனதில் பதியுங்கள்.
* உங்களது முடிவுகளை வலுக்கட்டாயமாக யாரிடமும் திணிக்காதீர்கள். இடைமறித்து பேசாதீர்கள்.
* ஒருவர் பேசுவதில், உங்களுக்கு புரியாததை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் முறையான கேள்விகளை கேளுங்கள். அதேசமயம், உங்களது கேள்வி பேசுபவர் சொல்ல வரும் கருத்துக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் இருக்கக் கூடாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
* பேசுபவர் எந்த உணர்வோடு பேசுகிறாரோ, அதை நீங்களும் உணர முயலுங்கள்.
* தலை அசைவு அல்லது உற்சாகமான வெளிப்பாட்டுடன் பேச்சாளருக்கு பதிலளியுங்கள்.
* மன ரீதியாக உள்ள இடர்பாடுகளை முற்றிலுமாக களைந்துவிடுங்கள்.
* பேசுபவர் பயன்படுத்தும் உச்சரிப்பு, செய்கை போன்றவற்றையும் கவனித்தால் அவர் சொல்லவரும் கருத்துக்களை கவனிக்க முடியாமல் போகும் என்று தோன்றினால், அவரது கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து கேளுங்கள்.
* உங்களது சொந்த கருத்துக்கள், உணர்வுகளை நீங்களாக மனதில் ஓடவிட்டால், பேசுபவர் சொல்லவருவது உங்களுக்கு புரியாமல் போகலாம். எனவே, அவற்றை தவிர்த்துவிடுங்கள்.
* நீண்ட நேர விரிவுரையை கேட்க வேண்டியிருந்தால், முக்கிய விஷயத்தை மட்டும் குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.
* கையாள்வதற்கு கடினமானவர்களுடன் பேச நேர்ந்தால், நீங்கள் அதிகம் பேசுவதை தவிர்த்து, அவர் பேசுவதை கேட்பதற்கு அதிக நேரத்தை செலவிடுங்கள்.
* பேசுவதை கேட்பதா? அல்லது நீங்கள் பேசுவதா? என்பதில் சந்தேகம் இருந்தால், அவர் பேசுவதை கவனிப்பதே நல்லது.

Always with Affection...
S.Devarajan.

No comments:

Post a Comment