காதலின் தீபம் ஒன்று ...
கடவுளின் மார்பில் ஏற்றிய ....
கோதை நாச்சியார் ஆண்டாள்.
திருப்பாற்கடல் ,பரந்தாமன் அருகில் பூமிப்பிராட்டி , இருவருக்குமிடையில் ஓர் உரையாடல்
"சுவாமி பூலோகத்தில் யாரை உங்களுக்கு அதிகம் பிடிக்கும்" பூமி தேவியார்
"எனக்கு பூமாலையும் பாமாலையும் சூடுபவர்கள்" பகவான்
"எனில், நானும் உங்களுக்கு சேவை செய்வதற்கு பூலோகம் செல்ல ஆசைப்படுகிறேன் சுவாமி"
"அப்படியே ஆகட்டும், சற்று கீழே பார்"
பூலோகம், ஸ்ரீவில்லிபுத்தூர்
"மலர்களிலே பல நிறம் கண்டேன் -அதில்
மாயவன் வடிவு கண்டேன்" என்ற கண்ணதாசன் பாடலை பாடியவாறே ஸ்ரீவிஷ்ணுசித்தர்,பட்டர்பிரான் மற்றும் பெரியாழ்வார் எனப்பல பெயர்களைக்கொண்ட ஸ்ரீவிஷ்ணுசித்தர் பூப்பரித்துக்கொண்டும் , அதைக்கொண்டு பூமாலை தொடுத்தவாறே பாமாலைகளையும் உணர்வுப்பூர்வமாக பாடிக்கொண்டிருக்கிறார் .
பெருமாள் இவரைப்பற்றிய அனைத்து தகவல்களையும் பூமிதேவியிடம் விரிவாக எடுத்துக்கூறி
"தேவி இவர் உன் அருளால் பின்னாளில் பெரியாழ்வார் எனப்பெயர் பெறப்போகும் என் அன்பைப் பெற்ற ஆழ்வாரின் மகளாக அவதரிப்பாய்"
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆடிமாதம் , பூரநட்சத்திரம் ஆழ்வாரின் திருமகளாக வடபத்ரசாயி பகவான் நந்தவனத்தில் அவதரித்தாள் .நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் கீழ் கண்டெடுத்த பெண் புதையலுக்கு "கோதை" என்ற பெயர் சூட்டி பூமாலை தொடுக்கவும் பெருமான் பெயரில் பாமாலை தொடுக்கவும் சொல்லிக்கொடுத்து சீரோடும் சிறப்போடும் போற்றி வளர்த்துவந்தார்.
கோதைக்கு வைணவ ஸ்தலங்களின் பெருமைகளையும் பெருமாளின் அவதார சரித்திரங்களையும் ஆழ்வார் திரும்பத்திரும்ப பாடிக்காட்டினார். கோதையின் உணர்வுகள் எந்நேரமும் பெருமாளிடமே நிலைத்தது .தன்னையும் ஒரு கோபிகையாக நினைத்து ஆயர்பாடி பெண்களுக்கும் மேலாக வளர்கின்றார் .
வயது கூடக்கூட கோதையின் பக்தி பகவானின் மேல் காதலாக மாறுகிறது . காதல் வயப்பட்ட கோதையின் பாமாலைகள் உணர்ச்சிப் பூர்வமாக பாடப்படுகிறது.காதலின் உச்சமாக தான் தொடுத்த மாலையை தானே அணிந்து அழகுபார்த்து பின் பெருமாளுக்கு அணிவதற்கு தந்தை வசம் கொடுத்து விடுவாள்.
இதனை பெரியாழ்வார் ஒருநாள் பார்த்து பயந்து கோதையிடம் " அபச்சாரம் செய்து விட்டாய் " எனக்கடிந்து பெருமாளுக்கு மாலையிடாமல் துயரத்தில் அமர்ந்தவாறு உறங்கிவிட்டார். பெருமான் அவர் கனவில் வந்து " ஐயனே தங்கள் மகள் சூடிக்கொடுத்த மாலையே எனக்கு மிகவும் உவப்பானது , கவலை வேண்டாம் " என மறைந்தார் .
பெரியாழ்வார் வியப்புடன் விழித்தவர் தம்முடையமகள் பிராட்டியின் அம்சம் என உணர்ந்து மனதுள் போற்றினார்.
கோதையின் திருமணப்பருவம் வந்தது ,திருமணம் பற்றி பேச்செடுத்தவுடன்
"மானிடரை மணவேன் பெருமாளே என் கணவர், அதிலும் திருவரங்கத்துப் பெருமாளையே மணக்க விரும்புகிறேன்" என்று சொல்லிவிட்டார்.
மறுபடியும் குழம்பிய பெரியாழ்வார் கனவில் " கவலை கொள்ள வேண்டாம் இங்கு அழைத்துவருக" என்றார் .
அந்த சமயத்தில் ஆட்சி செய்த பாண்டியமன்னன் அதற்கு உதவி செய்ய ஆழ்வார் கோதையை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் சென்றார்.
ஒரு நல்லநாளில் எல்லோரும் பிரமிப்புடன் நிற்க, கோதை அரங்கனின் கருவறை நுழைந்து நேராக பெருமானின் திருவடி பற்றி அமர்ந்ததும், கோதை ஆண்டாளாகி மறைந்து பகவானுடன் கலந்தாள்.
பெருமாளும் பிராட்டியும் பெரியாழ்வாருக்கும் அங்கிருந்த பக்தர்களுக்கும் தரிசனம் தந்தனர்.
ஆண்டாள் அருளிய பாசுரங்கள்,
ஆண்டாள் திருப்பாவை 30 பாடல்கள்
ஆண்டாள் நாச்சியார் திருமொழி 142 பாடல்கள்
அழகாக எழுதப்பட்ட இந்தப் பாடல்கள் மூலமாக ஆண்டாள் மனதில் இருப்பது கடவுள் மீதான ஆழ்ந்த பக்தியா, அற்புதமான காதலா அல்லது அதையும் மீறிய காமமா? இவை எல்லாம் கலந்த உணர்வு ஒரு தெய்வத்தன்மையை உருவாக்கி கடவுளுடன் கலக்க வைக்கிறது
No comments:
Post a Comment