Tuesday, November 16, 2010

மனதை சுத்தம் செய்ய.....




ஆசை உலகிற்கு பயன்படட்டும்

* மனிதர்கள் செய்யும் பல தவறுகளுக்கு ஆசையே 
அடிப்படையாகஇருக்கிறது. ஆசையினால் ஒன்றை 
அடைய விரும்புகிறோம்.அதனை அடைவதற்காக
சிலர்தர்ம வழியிலிருந்து விடுபட்டு, அதர்ம 
வழியைக்கடைப்பிடிக்கிறார்கள். எப்படியாவது 
ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற 
உந்துதலே தவறுகளுக்கு காரணமாகிறது. எனவே, 
ஆசையை விட்டொழிக்க வேண்டும்.

* அக்னியில் நெய்யை விடும்போது, அது மேலும் 
பெரிதாகிக் கொண்டுதான் போகிறதே தவிர அணைந்து 
விடுவதில்லை. அதைப்போலவே ஒரு ஆசை 
நிறைவேறும்போது, அடுத்த ஆசையை நிறைவேற்ற
வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது.
நாமாக நிறுத்திக் கொள்ளும்வரையில் ஆசைகள்
வந்து கொண்டேதான்இருக்கும். ஆசையில் இருந்து 
விடுபட மனதைஇறைவனிடம் வைக்க வேண்டும்.

* ஆசைகள் மனிதர்களை பாவச்செயல்களில்
ஈடுபடுத்தும்சக்தியாக இருக்கிறது. மனதில் இருக்கும்
ஆசைகள் கூடிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர
குறைவதில்லை.இதனால் இன்பத்தை காட்டிலும், 
துன்பமே அதிகமாக இருக்கிறது. எனவே, ஆசைக்கு 
தடுப்பு போட வேண்டியது அவசியம்.

* ஆசைகளை உலகிற்கு பயன்படுவதாகவும், 
உங்களுக்கு ஆத்மார்த்தமாக பலன் தருவதாகவும்
மாற்றிக்கொள்ளுங்கள்.இத்தகைய ஆசையில் ஈடுபாடு 
காட்டுங்கள். அதனை நிறைவேற்ற முனைப்புடன் 
செயலாற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டுக்
கொண்டிருக்கும்போது, மாயையான ஆசைகள் 
எல்லாம்உங்களை விட்டு விலகிவிடும்


* சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒருவழி
தான் உண்டு.எப்படிச் சுற்றினோமோ அப்படியே 
மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். 
அதைப் போலவே தவறான செயல்களை 
நற்செயல்களினாலும், பாவங்களைப் 
புண்ணியங்களினாலும் போக்கிக் கொள்ள வேண்டும்.

* தானம், தர்மம், கடமை புரிதல், பகவந் 
நாமாக்களை(தெய்வப் பெயர்கள்) உச்சரித்தல்,
கோவில்களைத் தரிசித்தல் ஆகிய நல்ல செயல்கள்
எல்லாம், பாவம் தொலைக்கும் வழிகளாகும்.

* மனத்தினால் செய்த பாவங்களை மனத்தாலும்,
கைகள், கால்களால் செய்த பாவங்களை அந்தந்த 
உறுப்புக்களினாலும்மட்டுமே தீர்க்க முடியும்.

* வெளியில் இருந்து வரும் பொருள்களில் 
மட்டுமே மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றைச் 
சுற்றியே மனிதன் துரத்திக் கொண்டு ஓடுகிறான். 
வெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில்
இருப்பதல்ல. அது வந்தாலும் வரும். போனாலும் 
போகும்.தனக்குள்ளே ஆனந்தம் இருப்பதை
மனிதன் மறந்து விடுகிறான்.

* நமக்குள் இருக்கும் மகிழ்ச்சி பெரிய சமுத்திரம்
போன்றது. பதவி, பணம், பெயர், புகழ் என்று
வெளியில்நாம் எதிர்பார்க்கும் எல்லாமே சொட்டுத்
தண்ணீருக்குசமமானது. இதை முற்றிலும்
உணர்ந்த ஞானிகள் வெளி இன்பத்தைத் 
தேடி அலைவதில்லை.


மனதை சுத்தம் செய்     

செம்பைத் தேய்த்து வெளுப்பாக்கிவிட்டால் 
மறுநாளும் அழுக்காகத்தானேசெய்கிறது. மறுபடி 
தேய்க்க வேண்டும். இதேபோல் நாம் சித்தத்தையும்
விடாமல் அனுஷ்டானத்தால் சுத்தம் செய்துகொண்டு
இருக்க வேண்டும்.

பகவான் என்று ஒருவன் சர்வ சாட்சியாகவும் 
சர்வ சக்தனாகவும் இருந்துகொண்டு நம் 
கர்மங்களுக்குப் பலன் தருகிறான் என்ற பய 
உணர்ச்சிதான், யுக யுகாந்திரமாக மனிதனைத்
தர்ம மார்க்கத்தில் நிறுவும் ஊன்றுகோலாக 
இருந்து வந்திருக்கிறது.

தேவர்களுக்கு நம்மைப் போல் மூப்பு மரணம்
இல்லை. அவர்களுக்குநம்மைவிட சக்தி அதிகம். 
இருந்தாலும் அவர்கள் நம்மிடமிருந்தே
ஆகுதி பெறுமாறு பகவான் வைத்திருக்கிறார்.














யாராயினும் ஆசை வேண்டாம் 

* ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் 
அசுத்தங்களை அகற்ற முடியும். அறிவை வளர்த்துக் 
கொள்வதற்கு முன்னால்ஒழுக்கம் அவசியம்.
இல்லாவிட்டால் செயல்கள் பிழையாகி 
கெட்டதை வளர்க்கும்.

* குறைச்சலான வசதியைக் கூடப் பெற 
முடியாதவர்களுக்கு உதவுவதுதான் தியாகம், 
தர்மம், புண்ணியம்.

* அன்பு எல்லாரிடமும், பொறுமை தவறு 
செய்கிறவனிடமும், பொறாமையின்மை நம்மை
விட மேல் ஸ்தானத்தில் இருக்கிறவனிடமும் 
கொண்டிருக்க வேண்டும்.

* பொருளைத் திருடிப் பெறக்கூடாது. இன்னொருவனை
வஞ்சித்துப் பெறக்கூடாது. லஞ்சம் வாங்கக்கூடாது. 
இன்னொருவன் வயிற்றில் அடிக்கக்கூடாது.

* ரதி சுகம் தர்ம பத்தினியுடன் 
அனுபவிக்கலாமாயினும்நிஷேத தினங்களில்
(சாஸ்திரங்களில் விலக்கப்பட்டநாட்களில்)
கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
பிற பெண்களைமனதாலும் நினைக்கக்கூடாது.

* குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், 
மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின்
பாவம் குருவையும் சேரும்.

* யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் 
கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம 
சம்பத்தும் உண்டாகாது.

* தனக்கென்று பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் 
செய்து கொள்வதிலும் தற்காலிக இன்பம் 
கிடைக்கலாம். ஆனால்உள்ளத்துக்கு நிறைவான 
ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.

* இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச்
செய்யாதநிலைத்த பேரின்பமே 'மோட்சம்'.

* தன் மனைவியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே 
கட்டும்செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் 
புருஷனுக்கு கவுரவம்


எளிய வாழ்க்கை வாழுங்கள்

நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே மற்றவர்கள்
வாழ வேண்டும் என்று நினைப்பது உத்தமமான 
எண்ணம். அதே நேரம், ஆசையை வளர்த்துக் 
கொண்டே போனால்ஆத்ம அபிவிருத்தி என்பதே 
இல்லாமல் போய்விடும்.

சவுக்கியம் தேடி அலைவது நம் மனசாந்தியை 
தொலைப்பதற்கான வழி.எவ்வளவு எளிமையாக 
வாழ்க்கையை நடத்த முடியுமோ, அவ்வளவு 
எளிமையாக இருப்பதே முதலில் நாம் கற்றுக் 
கொள்ளும் விஷயம்.வயிற்றுக்கு உணவு, மானத்தை 
மறைக்க ஆடை, குடியிருப்பதற்கு எளியவீடு

இம்மாதிரியான அடிப்படையான 
தேவைகளை எல்லோரும் பெறவேண்டும்.

இதற்கு மேல் ஆசைமேல் ஆசை, தேவைக்கு 
மேல் தேவைஎன்று பறக்க வேண்டியதில்லை. நாம் 
எளிமையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதே 
உலகத்திற்குச் செய்யும் மிகப் பெரிய பரோபகாரம்.
கிணற்றில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும்
போது கனம் தெரிவதில்லை.ஆனால், தண்ணீர்
மட்டத்திற்கு மேலே குடம் வந்தவுடன் அதன் 
கனத்தை நம்மால் உணரமுடிகிறது.

எளிதில் கொண்டு செல்ல முடியாத பெரியமரங்களை
தண்ணீரில் போட்டு இழுப்பது வழக்கம். அதேபோல, 
நம்மைத் துன்பங்கள் தாக்காமல் இருக்க ஞானம்
என்னும் தண்ணீரில் ஆழ்ந்து விட வேண்டும்.

 அப்போது துன்பவிஷயங்கள் இருந்தாலும் அதன் 
தாக்கம் மனதைத் தொடுவதே இல்லை. 
நீருக்குள் இருக்கும் குடம் போல அப்போது 
துன்பம் பரமலேசாகி விடும்.
 
                       -மகாப் பெரியவா...


அய்யா  நாயேனையும் நல்வழிப் படுத்தி 
அருள் புரியுங்கள் .உங்கள்  திருவடி சரணம் ...
உங்களை உணர  அருள் புரியுங்கள் .

No comments:

Post a Comment